முருகப்பெருமானின் 2 படை வீடுகளை இணைக்கும் வகையில்

முருகப்பெருமானின் 2 படை வீடுகளை இணைக்கும் வகையில்

மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமலுக்கு வருகிறது


தென்னக ரயில்வே அதிகாரிகள் முழுவீச்சில் மும்முரம்



தமிழகத்தில் சங்கம் வளர்த்த மதுரை, 4-வது பெரிய மாவட்டம் ஆகும். இது 3710 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 4 வருவாய் கோட்டங்கள், 11 தாலுகாக்கள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 420 ஊராட்சிகள், 655 வருவாய் கிராமங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. இங்கு 32 லட்சத்து 10 ஆயிரத்து 442 பேர் வசிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், மதுரை சந்திப்பு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி ஆகிய 6 நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து உள்ளது. ஆனாலும் மேற்கண்ட வழித்தடங்களில் பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இது பயணிகளின் அன்றாட போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. எனவே இங்கு வசிக்கும் பொதுமக்கள் முழுக்க முழுக்க சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.

ஆனால் இங்கு உள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. எனவே மதுரை மாவட்டத்தில் சதா நேரமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் திருமலை நாயக்கர் மஹால் உள்பட எண்ணற்ற ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை நேரடியாக கண்டு மகிழ்வதற்காக தினமும் வெளிநாடு- மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

 மதுரையில் பிரசித்தி பெற்ற அரசினர் மருத்துவமனை உள்ளது.. இங்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சரணாலயமாக விளங்கி வருகிறது.

நாகமலை புதுக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை மார்க்கமாக போதிய பேருந்து வசதிகள் இல்லை.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இது நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மதுரை மாவட்டத்தில் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் சமீபத்தில் டென்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை 120 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

மதுரை மாவட்டத்தில் ஜன நெரிசல் மிகுந்த பகுதிகள், ஆன்மீக சுற்றுலா பிரதேசங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய வேண்டும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் விரும்புகிறது.

இதற்காக ரயில்வே பொறியாளர்கள் மட்டத்தில் மதுரை மெட்ரோ ரயிலுக்கான சிறப்பு திட்டம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி டி.கல்லுப்பட்டியில் இருந்து தோப்பூர், நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, பேரையூர், சாப்டூர், உசிலம்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், அழகர் கோவில், மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர் ஆகிய வழித்தடங்களில் ஆகியவற்றின் வழியாக மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தலாமா? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் ஜன நெரிசல் மிகுந்தவை. அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இங்கு கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இங்கு மருத்துவமனை திறக்கப்படும் பட்சத்தில், தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரைக்கு  வந்து செல்ல வாய்ப்பு உண்டு.

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனாலும் இவர்களுக்கு சாலை மார்க்கமாக போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.

தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருச்செந்தூர், பழனி ஆகியவை உள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 படை வீடுகள் உள்ளன. இது சர்வதேச அளவில் மிகவும் அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது.

எனவே முருகப் பெருமானின் 2 படை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ஆகிய பகுதிகளை ரயில் மார்க்கமாக இணைத்தால் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும்.

அடுத்தபடியாக சாப்டூரில் சுந்தரலிங்க சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சோழவந்தானில் உள்ள குருவித்துறை குருபகவான் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற தலம். ஒத்தக்கடையில் நரசிங்க பெருமாள் கோவில், சமணப்படுகைகள் உள்ளன.

எனவே ஜன நெரிசல் மிகுந்த நகரங்களுடன் மேற்கண்ட ஆன்மீக தலங்களையும் ஒரே நேர்கோட்டில் ஒருங்கிணைக்கும் வகையில் மெட்ரோ ரயிலை இயக்கும் பட்சத்தில் கூடுதல் வருமானம் பெற முடியும் என்று தென்னக ரயில்வே நம்புகிறது.

மதுரையில் மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில், திட்டப்பணிகளை அடுத்த ஆண்டுகளுக்குள் தொடங்குவது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் முருகப்பெருமானின் இரண்டு படை வீடுகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments